சென்னை: பரந்தூர் சென்று மக்களை சந்திக்கும் விஜய், அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால், நிச்சயமாக அந்த குறைகளை அரசு பரிசீலிக்கும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விமான நிலையத்தை உருவாக்குவது என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த அவசியமான ஒன்று என்பதை நாம் யாரும் மறுத்து விட முடியாது. ஏன் பரந்தூர் விமான நிலையம் அவசியமாக இருக்கிறது என்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு நகரங்கள் டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் என எதை எடுத்துக் கொண்டாலும் நம்முடைய இப்போது இருக்கக்கூடிய சென்னை விமான நிலையம் மிகச் சிறிய விமான நிலையமாக இருக்கிறது.
இருந்தாலும் சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 2 கோடி பேர் பயணம் மேற்கொள்கின்றனர். அடுத்த 7 ஆண்டுகளில் இது இன்னும் உயரும். இதனால் சென்னை விமான நிலையத்தை விரிவுப்படுத்தினாலும், சமாளிக்க முடியாது. இதனால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி இரண்டுக்கும் இடையில் உள்ள தொடர்பை உணர்ந்திருப்பதால் தான், பரந்தூர் விமான நிலையம் அவசியம். இது தொழிற்புரட்சிக்கும் அடித்தளமாக அமையும்.
பரந்தூருக்கு எந்த அரசியல் கட்சி தலைவர்களும் செல்லலாம். பரந்தூர் சென்று மக்களை விஜய் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால், நிச்சயமாக அந்த குறைகளை அரசு பரிசீலிக்கும். விஜய் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் எல்லாவற்றுக்கும் தேவையாக உள்ளது. வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மக்கள் பாதிக்கக் கூடாது. அதனால் கிராமங்களில் பாதிப்படையக் கூடிய மக்களுக்கு, சந்தை மதிப்பை விடவும் கூடுதல் இழப்பீடு அளிப்பதிலும், அவர்களின் மறுகுடியமர்விலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.