கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மப் பொருள்: எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரம், தண்டவாளம் சேதம்

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் இருந்த மர்மப் பொருளால் ரயில் தண்டவாளம், கோவை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரம் சேதமடைந்ததால் மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு 1 மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

கோவை நாகர்கோவில் விரைவு ரயில் கோவையில் இருந்து கரூர் வழியாக வெள்ளிக்கிழமை (ஜன. 17) நாகர்கோவில் சென்றது. கரூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் தாந்தோணிமலை ஏமூர் இடையே காலை 11.41 மணிக்கு செல்லும்போது மர்மப்பொருள் மோதியதில் ரயில் சக்கரத்தில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் ரயில் தண்டவாளம், ரயில் சக்கரம் ஆகியவை சேதமடைந்தன.

இதையடுத்து வெள்ளியணை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திய ஓட்டுநர் கரூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரயில்வே போலீஸார், ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் தண்டவாளத்தை சீரமைத்தனர்.

ரயில் இன்ஜின் சக்கரம் சேதமடைந்ததால் கரூரில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டதை அடுத்து ரயில் 1 மணி 20 நிமிடத்திற்கு மேல் தாமதமாக மதியம் 1.05 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த மர்மப்பொருள் இரும்புத்துண்டா என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE