திமுகவின் பி டீமாக செயல்பட்டு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார் இபிஎஸ்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

By KU BUREAU

புதுச்சேரி: எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்லாமல் இருக்க திமுகவின் டி டீம் ஆக செயல்படுகிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து காட்டாட்சி நடக்கிறது. திமுக ஆட்சியை அகற்ற ஜெலலிதாவின் தொண்டர்கள் ஒரணியில் தொடர வேண்டும். திமுக குடும்பக் கட்சி என்பதே தாண்டி குடும்பம் தான் எல்லாமே அங்குள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாகி வருகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை உறுதியாக முடிவுக்கு கொண்டு வருவோம்.

ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளோம். ஏழை மக்களை காலை முதல் மாலை வரை பட்டியில் அமரவைத்தது போல் உட்கார வைத்தனர். இந்த இடைத்தேர்தல் தமிழக தலையெழுத்தை மாற்றி அமைக்க போவதில்லை. தேர்தல் ஆணையத்தால் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம், பண பலத்தை கட்டுப் படுத்த முடியவில்லை என்பதால் பாஜக உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் புறக்கணித்துள்ளன. இரட்டை இலை இருந்தும் திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்யும் வகையில் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி எனும் சுயநல மனிதரின் ஆட்டம் ஓய்ந்து விடும். தொண்டர்கள் விழித்து கொண்டால் அக்கட்சிக்கு பாதுகாப்பாக இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி கட்சித் தலைவரானதும், முதல்வரானதும் லாட்டரி சீட்டு அடித்தது போல் யோகம் தான். அவர் சிறைக்கு செல்லாமல் இருக்கவும், ஊழல் உட்பட எவ்வழக்கும் வராமல் இருக்கவும் திமுகவின் பி டீம் ஆக செயல்படுகிறார்" என்று தினகரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE