தமிழகத்துக்கு நல்லாட்சி வழங்கும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு: இபிஎஸ் சூளுரை!

By KU BUREAU

சென்னை: ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது. என தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தீய சக்தியிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்துவந்த மங்காத புகழ்பெற்ற மாமணி; எத்தனை எத்தனை தலைமுறைகள் தவம் செய்து பெற்றார்களோ என்று வியந்து பார்க்கும் வண்ணம் நமக்குக் கிடைத்திட்ட தெய்வப் பிறவி; ஏழை, எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்த வள்ளல் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அவர்தம் நெடும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

தலைமைக் கழகம் எம்ஜிஆர் மாளிகையில் அமைந்துள்ள நம் உயிர் நிகர் தலைவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம். ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.

அந்தப் பயணத்தில் கழக உடன் பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அஇஅதிமுக-வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றி வாகை சூடுவோம்!” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ம் நாள், ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE