சென்னை: மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பள்ளத்தில் நிற்போரைப் படிகளில் ஏற்றிய திராவிட மாடல் அரசு என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திராவிட இயக்கமும் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாறும் பிரிக்க முடியாத உறவை கொண்டவை. நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை வெளியிட்டு, இந்திய சட்டமன்ற வரலாற்றில் முதன் முதலில் இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. 1928ம் ஆண்டு வகுப்பு வாரி பிரதிநிதித்துவ சட்டம் நிரந்தரமாக்கப் பட்டது. இதனால், அரசியல், கல்வி, வேலை வாய்ப்பு உரிமை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைத்தது. அந்த நீதிக் கட்சியின் நீட்சி தான் திமுக அரசு. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை கல்வி, பொருளாதார, சமூக, அரசியல் தளத்தில் வலிமையுள்ளவர்களாகவும், வளர்ச்சி அடைந்தவர்களாகவும் உயர்த்த வேண்டும் என்பது தான் திராவிட இயக்கத்தின் முதன்மை லட்சியமாகும்.
இந்த லட்சியப் பயணத்திற்கு பாதை அமைத்து தரும் இடஒதுக்கீட்டு உரிமைகள் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்த காலமெல்லாம் உணர்வுப் பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது வரலாறு. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் சமூக நீதி உரிமைகளை நிலை நாட்டும் வகையில் திமுக அரசு பல்வேறு வகையான இடஒதுக்கீட்டு சட்டங்களை இயற்றி வரலாறு படைத்துள்ளது.
சமூகத்தின் கடை நிலையில் இருப்பவர்களுக்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்க வேண்டும் எனும் சமத்துவ நோக்கோடு பட்டியலின மக்களிடையே மிகவும் பின் தங்கிய நிலையிலிருந்த அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை 2009ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது வழங்கினார் கருணாநிதி. அதுவரையிலும் பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீட்டில் முழுமையாக பலனை அடையாத சமூகமாக அருந்ததியர் சமூகம் இருந்து வந்தது. இதனை அப்பொழுது ஓய்வு பெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியும் உறுதிப்படுத்தியிருந்தது.
» உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியில்லை: தவெக அதிரடி அறிவிப்பு!
» ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்!
கருணாநிதி வழங்கிய உள் ஒதுக்கீட்டின் பயனால் அதுவரை கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் பெறாத அருந்ததியர் சமூக மக்கள், இன்றைக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகிறார்கள் என்பதை சமீபத்தில் வெளியான தரவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இதுகுறித்து இன்றைய தி இந்து ஆங்கில நாளிதழில் விரிவான செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது.
மருத்துவக் கல்வியில் அருந்ததியர்களின் பிரதிநிதித்துவம் குறித்து வெளி வந்துள்ள தரவுகளின் படி 2018-19ம் ஆண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 3,600 இடங்களில் 107 இடங்கள் அருந்ததியர் மாணவர்களுக்கு கிடைத்திருந்தன. திராவிட மாடல் ஆட்சியில் 2023-2024ம் ஆண்டு எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 6,553 ஆக உயர்த்தப்பட்டு, அதன் மூலம் 193 அருந்ததிய சமூக மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள்.
பல் மருத்துவ படிப்பை பொறுத்தவரை 2018-2019 ஆண்டில் மொத்தமுள்ள 1,080 இடங்களில் அருந்ததியர் சமூக மாணவர்களின் பிரதிநிதித்துவம் வெறும் 16 இடங்களே! அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை கூட முழுமையாக பூர்த்தி செய்ய இயலாமல், 1.5 விழுக்காடு அருந்ததியர் சமூக மாணவர்கள் மட்டுமே பல் மருத்துவம் பயின்றார்கள். இந்த அவநிலை 2023-24ம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மாற்றமடைந்தது. 1,737 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களில் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் 54 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களுக்கான 3 விழுக்காடு பிரதிநிதித்துவம் முழுமையாக கிடைத்தது. பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை 2009-10 ஆம் ஆண்டில் 1,193 இடங்களை பெற்றிருந்த அருந்ததியர் நிலை, 2023-24ம் ஆண்டில் 3,944 இடங்களை பெற்று உயர்ந்துள்ளது.
ஒட்டு மொத்த பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் 2016-17ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வெறும் 8.7 விழுக்காடு அளவில்தான் பயன் பெற்று வந்த நிலையில், 2023-24ம் ஆண்டில் 16 விழுக்காடு பயனைப் பெற்றுள்ளனர். இதர பட்டியலின சமூக மக்கள் 84 விழுக்காடு பயனடைந்து வருகின்றனர்.
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை கருணாநிதி நிறைவேற்றிய போது, ”அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை” என அன்றைக்கு சொன்னவர் ஜெயலலிதா. உள் ஒதுக்கீடு வழங்கிவிட்டு அமைதியாக இருக்காமல், அதற்கான தடைகளை தகர்த்து சட்டப் போராட்டங்களை உச்சநீதிமன்றம் வரையில் போராடியது திமுக. அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு உத்தரவிட்டது
2008 நவம்பர் 23ம் தேதி கலைஞர் அவர்கள் எழுதிய கவிதையில்,
கழிவுற்ற மலத்தைக் கைகளில் அள்ளி –
கண் கலங்க ஒரு தொழிலாளி;
தலையில் சுமந்து தன் நிலையை நினைத்து
நடக்கும் காட்சி இன்னமும் நடக்குதே நாட்டில்!
தலையில், கையில் மலம் தூக்குவோர் தலைவிதி மாற்றிட
தலையில் தூக்கி சனார்த்தனம் அறிக்கையை வைத்துக்கொண்டு ஆடுகின்றேன் நான்
பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைக்க; பணி புரிவோம் தொடர்ந்து!
பகுத்தறிவைத் துணை கொண்டு நடந்து!
எனக் குறிப்பிட்டார். அந்த பகுத்தறிவைத் துணைக் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலின் அரசு, எடுத்த முன்னெடுப்புகளால்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்றதோடு, அருந்ததியர் சமூகத்தினர் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் உரிய பிரதிநிதித்துவத்தையும் பெற்றிருக்கிறார்கள். பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம் என்ற பெருமிதத்தோடு செயல் படுகிறது திராவிட மாடல் அரசு. சமூக நீதிக்கான லட்சியப் பயணத்தில் இச்சாதனை ஒரு முக்கிய மைல்கல்” என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.