ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்!

By KU BUREAU

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இன்று காலை 11 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி, தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சீதாலட்சுமி கூறியதாவது, “சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து மனுத்தாக்கல் செய்ய போலீஸார் அனுமதி மறுத்து விட்டனர். திமுகவினர் இப்போதே அராஜகத்தை தொடங்கி விட்டனர். சட்டத்துக்கு உட்பட்டு பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவின் அடக்குமுறையை மீறி, சீமான் தலைமையில், சட்டத்துக்கு உட்பட்டு பிரச்சாரம் மேற்கொள்வோம்.வாக்காளர்களைச் சந்தித்து நீதி கேட்போம். அவர்கள் எங்களை ஆதரித்து திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை, அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. இத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE