2026ல் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அதிமுக ஆட்சி அமையும்: மாநில செயலாளர் அன்பழகன் உறுதி!

By அ.முன்னடியான்

புதுச்சேரி: தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியை எதிர்வரும் 2026ல் வீட்டுக்கு அனுப்பி எம்ஜிஆரின் புனித ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிச்சயம் அமையும். அப்போது புதுச்சேரியிலும் அதிமுக ஆட்சி மலரும் என அம்மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆரின் 108ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் உப்பளம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது அன்பழகன் பேசியதாவது: உலகில் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் நலன் காக்க எத்தனையோ தலைவர்கள் உருவாகியுள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் பல்வேறு நன்மைகள் செய்தாலும் அவர்களின் மறைவுக்கு பிறகு காலபோக்கில் மக்கள் அந்த தலைவர்களை மறந்துவிடுவார்கள். இப்படிப்பட்ட தலைவைர்களின் மத்தியில் எம்ஜிஆர் மட்டும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் மாமனிதராக உள்ளார்.

எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த 10 ஆண்டு காலமும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக எண்ணற்ற வியக்கத்தக்க திட்டங்களை கொண்டுவந்தவர். அவரால் உருவாக்கப்பட்டது தான் அதிமுக. அதனை வழி நடத்த அவரால் அடையாளம் காட்டப்பட்டவர் ஜெயலலிதா. இவர்கள் இருவரின் மறைவுக்கு பிறகு நம் இயக்கத்தில் பல்வேறு பதவிகளையும், சுகங்களையும் கண்டவர்கள் திமுகவின் கைப்பாவையாக மாறி இந்த இயக்கத்தை அழிக்க துணை நிற்கிறார்கள்.

இந்த இயக்கத்தை அழிக்கவும், நமது வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் ஏதோ மீட்பு தலைவர்கள் என பெயர்கள் சூட்டிக்கொண்டிருக்கும் நபர்களின் சதி துரோக செயல்களை தனது மதி நுட்பத்தாலும், சட்டத்தின் துணையோடு நின்று மீட்டெடுத்தவர் பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் அரசியல் அரங்கில் இருந்து உரிய விலாசம் இல்லாமல் அல்லல்படுகின்றனர். அவர்கள் யாரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

அதிமுக என்ற பெயரையும், அதிமுக கொடியையும் பயன்படுத்த உரிமை இல்லையென உச்சநீதிமன்றம் வரை உத்தரவிட்டும் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் நம் இயக்கத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியும் மக்களிடம் எடுபடாது. தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியை எதிர்வரும் 2026ல் வீட்டுக்கு அனுப்பி எம்ஜிஆரின் புனித ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிச்சயம் அமையும். அப்போது புதுச்சேரியிலும் அதிமுக ஆட்சி மலரும். இதற்காக அனைவரும் பாடுபட வேண்டும்" என்று அன்பழகன் தெரிவித்தார்.

இதையடுத்து அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு சுப்பையா சாலை, காந்தி வீதி, புஸ்ஸி வீதி வழியாக புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE