சூரிய ஒளி, காற்றாலை மின்னுற்பத்தியில் பின் தங்குகிறது தமிழ்நாடு. சூரிய ஒளி, காற்றாலை மின்னுற்பத்திக்காக தனிக் கொள்கை, தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகியவற்றைத் தயாரிப்பதற்கான வளங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக இருந்தாலும், அந்த வகை மின்சாரங்களின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தியில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த தமிழ்நாடு இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மரபுசாராத மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் போதிய கொள்கைகளும், வழிகாட்டுதல்களும் இல்லாதது தான் இதற்கு காரணம் ஆகும். இது தமிழக அரசின் படுதோல்வி ஆகும்.
2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்னுற்பத்தியில் 32,246 மெகா வாட் நிறுவு திறனுடன் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும், 31,482 மெகா வாட் நிறுவு திறனுடன் குஜராத் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இவற்றுடன் போட்டியிட முடியாத அளவுக்கு மிகவும் பின் தங்கி 24,274 மெகா வாட் நிறுவுதிறனுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் தான் உள்ளது.
காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்னுற்பத்தியில் 2017ம் ஆண்டு வரை தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருந்தது. காற்றாலை மின்னுற்பத்தியைப் பொறுத்தவரை 2023 ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு 9,964 மெகா வாட் நிறுவு திறனுடன் முதலிடத்திலும், 9,918 மெகா வாட் நிறுவுதிறனுடன் குஜராத் இரண்டாவது இடத்திலும் இருந்தன. ஆனால், அதே ஆண்டின் ஆகஸ்ட் மாத நிலவரப்படி குஜராத் மாநிலம் 11,063 மெகாவாட் நிறுவுதிறனுடன் முதலிடத்தை பிடித்தது. தமிழ்நாடு 10,248 மெகா வாட் நிறுவுதிறனுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இப்போதும் அதே நிலை நீடிப்பது மட்டுமின்றி, இரு மாநிலங்களுக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்திருக்கிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி குஜராத் 12,473 மெகா வாட்டுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 11,409 மெகா வாட்டுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
» உதகை மேல் தாவணெ கோயில் பிரச்சினை - தீர்வு காண கோரி ஆட்சியர் முகாம் அலுவலகம் முற்றுகை!
» ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை எதிர்நோக்கும் போக்குவரத்து ஊழியர்கள்!
அதேபோல், சூரிய ஒளி மின்சார உற்பத்தியில், தமிழ்நாடு வெறும் 9,518 மெகா வாட் நிறுவு திறனுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் 26,489 மெகா வாட் திறனுடன் முதலிடத்திலும், குஜராத் 16,795 மெகா வாட் திறனுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. முதல் இரு இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்களுக்கு இடையிலான சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவு திறன்களின் வித்தியாசத்தை விட (9694) தமிழகத்தின் நிறுவுதிறன் குறைவு ஆகும். காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி தொடர்பாக தமிழக அரசுக்கு எந்த தொலை நோக்குப் பார்வையும் இல்லாததையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன.
பத்தாண்டுகளுக்கு முன் 2023ம் நிலவரப்படி காற்றாலை மின்னுற்பத்தித் திறன் தமிழ்நாட்டில் 7245 மெகா வாட்டாகவும், குஜராத்தில் 3313 மெகா வாட்டாகவும் இருந்தன. அப்போது குஜராத் மூன்றாவது இடத்தில் இருந்தது. தமிழ்நாட்டின் காற்றாலை மின்னுற்பத்தி குஜராத்தின் மின்னுற்பத்தியை விட இரு மடங்குக்கும் அதிகம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் அனைத்துப் பெருமைகளையும் இழந்து நிற்கிறது தமிழ்நாடு.
சூரிய ஒளி மின்னுற்பத்தியைப் பொருத்தவரை, ராஜஸ்தானுக்கு இணையாக தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் சூரிய ஒளி ஆதாரம் அளவுக்கு அதிகமாக உள்ளது. ஆனால், அதைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு முறையான கொள்கைகளை வகுக்கவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 50 மெகா வாட் திறன்கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் இன்று வரை ஒரு மாவட்டத்தில் கூட சூரிய ஒளி பூங்கா அமைக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளைக் கூட திமுக அரசு மேற்கொள்ளவில்லை.
2021ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக, தமிழகத்தில் 6000 மெகா வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் திட்டங்கள் அடுத்த இரு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்; அவற்றில் 2000 மெகா வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டங்களை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல் படுத்தும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு செயல்படுத்தப் பட்டிருந்தால், சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திற்கு கூட முன்னேறியிருக்க முடியும். ஆனால், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் முதல் அடியைக் கூட திமுக அரசு இதுவரை எடுத்து வைக்கவில்லை.
காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான வளங்கள் தமிழகத்தில் ஏராளமாக இருந்தாலும் கூட அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற கொள்கைகள் இது வரை வகுக்கப் படவில்லை. அதேபோல், மரபு சாரா எரிசக்தி தான் உலகின் எதிர்காலம் என்று தீர்மானிக்கப்பட்டு விட்ட நிலையில், அதை வளர்த்தெடுக்க தனி அமைச்சகம் தேவை.
மத்தியில் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே அத்தகைய அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்திலோ, இன்று வரை மரபு சாரா எரி சக்தித் துறை தொடங்கப்படவில்லை. இத்தகைய போக்கை கைவிட்டு, தமிழ்நாட்டில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அவற்றுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படுவதுடன், தனித் தனி கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.