கோபியில் சோகம் - கடன் பிரச்சினையால் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

By KU BUREAU

கோபி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்சினை காரணமாக இவர்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர்(36). இவரது மனைவி பாலாமணி (29). இவர்கள் இருவரும் வெள்ளாங்கோயிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு வந்தனா(10) என்ற மகளும், மோனீஸ் (7) என்ற மகனும் உள்ளனர்.

தனசேகருக்கு அதிகளவில் கடன் இருந்ததால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை காலை இருந்தே கணவன், மனைவிக்கு இடையே கடன் தொல்லை காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றிய நிலையில், அவர்கள் குழந்தைகளை கொன்று விட்டு தாங்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று மதியம் தென்னை மரத்தில் வண்டுகளை கட்டுப்படுத்தும் பயன்படுத்தும் மாத்திரைகளை, குளிர்பானத்தில் கலந்து மகள் வந்தனா மற்றும் மகன் மோனீசுக்கு கொடுத்து உள்ளனர். இருவரும் சிறிது குடித்த போதே, கசப்பு காரணமாக கீழே துப்பி விட்டு கதறி அழுதுள்ளனர். அதற்குள் தனசேகரும், பாலாமணியும் மாத்திரைகளை தின்றதால், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளனர்.

குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து, நான்கு பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே தனசேகரும், பாலாமணியும் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்தனாவும், மோனீசும் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE