இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 16,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதலே சுற்றுலா தலங்களில் அதிகளவில் பொதுமக்கள் குவிந்து வரும் நிலையில், சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் திரளும் நிலையில், சென்னையில் உள்ள பொழுதுபோக்கு மையங்களான மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, தீவுத் திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 16,000 போலீஸாருக்கு உதவியாக 1,500 ஊர்க்காவல் படையினரும் களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளனர். மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மெரினாவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது கடலில் இறங்கி மூழ்கினால் அவர்களை மீட்பதற்காக, நீச்சல் தெரிந்த 200 பேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.