திருவள்ளுவர் நாளில் சென்னையில் இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவு: சீமான் கண்டனம்

By KU BUREAU

சென்னை: திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு இன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் இயங்கக்கூடிய இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும் என்கின்ற சென்னை மாநகராட்சியின் உத்தரவு கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வள்ளுவனின் பாக்களைப் படித்துத் தெளிந்த தமிழ்ச் சமூகம் சூழலுக்கு ஏற்ப அவற்றைத் தங்கள் வாழ்வியலில் பின்பற்றி வள்ளுவத்தைக் காலந்தோறும் போற்றி வருகிறது. வள்ளுவத்தையும் தனிமனித உணவு விருப்பத்தையும் எவ்வித முரணுக்கும் இடமின்றிக் கடைபிடித்து வரும் தமிழர்களின் நடுவில், வள்ளுவரைத் தன்வயப் படுத்த முயற்சி எடுத்துத் தோற்று நிற்கும் சனாதன சக்திகளின் நோக்கத்திற்கு வழிவகை செய்வது போலத் தற்போதைய தமிழக அரசின் அறிவிப்பு உள்ளது. இறைச்சிக் கடைகளை ஒருபுறம் மூடினாலும் இணைய வழி உணவு சேவைகளின் வழியே இறைச்சி உணவுகளை மக்கள் பெற முடியும் என்பது எளிய முறையில் வணிகம் நடத்தும் வியாபாரிகள் மீது தொடுக்கப்படும் தடையாகவும் பார்க்க வேண்டி உள்ளது.

திருவள்ளுவர் நாளில் இறைச்சிக் கடை மூடல் என்பது 1980ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் வழியே தொடர்வதாக அரசு "தகவல் சரிபார்ப்பகம்" எனும் தன்னுடைய அமைப்புகளின் வழியாக காரணம் கூறுவதை விட்டுவிட்டு இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை முறை திராவிட மாடல் ஆட்சி அமைந்தது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சனாதனக் கோட்பாட்டைப் பின்பற்றும் இதுபோன்ற அறிவிப்புகளை அதிமுக அரசு முன்மொழிந்து தொடர்ந்தாலும் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு ஒரு முறை கூட வரவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

எவ்விதப் பகுத்தறிவுக்கும் இடம் அளிக்காத இது போன்ற உத்தரவுகளை அடிக்கடிப் பிறப்பித்துப் பின் எதிர்ப்புகள் எழுந்த பிறகு திரும்பப் பெறுகின்ற ஆழம் பார்க்கும் ஆரியத்தனத்தினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும், தற்போதைய சென்னை மாநகராட்சியின் உத்தரவினால் இறைச்சிக் கடை வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE