சென்னை: 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக முதல்வர் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்கள்.
சென்னையில் உள்ள 18 இடங்களில் நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது . இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்கள்’ என்று செய்திக்குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
» முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள்: டிடிவி.தினகரன் புகழ்வணக்கம்
» பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிபாயும் காளைகள் - மல்லுக்கட்டும் மாடுபிடி வீரர்கள்!