ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்குபவர்களுக்கு அரசு வேலை - அன்புமணி

By KU BUREAU

ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்குபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுரை மாவட்டத்தில் புதன் கிழமை தொடங்கி நடைபெறவுள்ள புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாடு பிடி வீரர்களுக்கு காருக்குப் பதிலாக டிராக்டர் வழங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது டிராக்டர் பரிசாக வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகளின் உரிமையாளர்கள், காளையை அடக்கும் வீரர்கள் என இருவருக்குமே டிராக்டர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவனியாபுரத்தில் காளைகளின் உரிமையாளர்களுக்கு மட்டும் டிராக்டர் பரிசாக வழங்கப்படும் என்றும், காளைகளை அடக்கும் வீரருக்கு கார் பரிசாக அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்திலும் காளைகளை அடக்கும் வீரருக்கு காருக்குப் பதில் டிராக்டரை பரிசாக வழங்கவேண்டும்.

காளைகளை அடக்கும் வீரர்கள் அனைவருமே வேளாண் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு கார்களால் பயன் இல்லை; மாறாக டிராக்டர்கள் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஈட்டித்தரும் என்பதால் தான் இப்படியொரு யோசனையை தெரிவித்திருந்தேன். அந்த யோசனையை ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள் ஏற்றுக் கொண்டது அவர்களின் சமூக அக்கறையைக் காட்டுகிறது. பரிசாக வழங்கப்படும் டிராக்டருடன் பலவகையான கலப்பை கருவிகளையும் வழங்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசு சார்பிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சார்பிலும் வழங்கப்படும் பரிசுகளும் வாழ்வாதாரம் வழங்குபவையாக இருக்க வேண்டும். போட்டிகளில் அதிக காளைகளை அடக்குபவர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கடந்த ஆண்டு விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதியையும் உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE