அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைச்சர் மூர்த்தி தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்பு

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: அவனியாபுரத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக வாடிவாசல் முன்பு நின்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்குவதாக இருந்த ஜல்லிக்கட்டு முன்கூட்டியே காலை 6.30 மணிக்கே தொடங்கியது. அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்கள் வாடிவாசலை சூழ்ந்து களமாடினர். இதனை காண்பதற்கு வெளிநாட்டினர் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டில் வாடி வாசலில் இருந்து திமிலோடும், திமிரோடும் சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்குவதற்கு மல்லுக்கட்டிய சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசும், மாடுபிடி வீரர்களை துவம்சம் செய்து யாருக்கும் அடங்காத காளையாக அடக்கமுடியாத காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசும் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் வழங்கப்படுகிறது. இதற்காக கார், டிராக்டர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2,026 காளைகளும் 1,735 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

வர்ணனையாளர் செங்குட்டுவன் வாடிவாசலில் இருந்து சீறும் காளைகளையும், அடக்கும் காளையர்களுக்கும் உற்சாகமூட்டும் வகையில் வார்த்தை ஜாலங்களுடன் வர்ணனை செய்வது அனைவரையும் கவர்ந்தது. மாடுபிடி வீரர்களுக்கு மஞ்சள், இளஞ்சிவப்பு, நீல நிறம் என டி-சர்ட் வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு சுற்றுக்கும் மாடுபிடி வீரர்கள் 50 பேர் களமிறங்கினர். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றில் பங்கேற்று அதில் அதிக காளைகளை அடக்குவோருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

இதில் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், வயர் கட்டில், அண்டாக்கள், சைக்கிள்கள், மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை குளவி கொட்டியதால் அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் டாக்டர்கள் குழுவினர் காளைகளை பரிசோதித்து தகுதிச் சான்று வழங்கினர். இதில் ஊடகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட கேலரிகளில் பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் ஒளிப்படங்கள் எடுப்பதிலும் ஒளிப்பதிவாளர்கள் சிரமப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE