புதுச்சேரி: பாஜகவுக்கு வாக்களிக்க புதுச்சேரி மக்கள் தயாராக இல்லை; புதுச்சேரியின் வளர்ச்சிக்காக முதல்வரோ, அமைச்சர்களோ டெல்லி செல்லவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி திமுக சார்பில், சமத்துவ பொங்கல் விழா மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனூர் கிராமம் மாரியம்மன் கோவில் திடலில் இன்று நடைபெற்றது. இந்த விழாவை, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தொடங்கி வைத்தார்.
தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை பறைசாற்றுகின்ற கிராமிய இசை, மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் மகளிர் பங்கேற்று கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் முனைவர் சபாபதி மோகன் மற்றும் திமுக மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது: ஆட்சி அதிகாரத்திற்கான சண்டை தான் புதுச்சேரியில் நடக்கிறது. புதுச்சேரியின் வளர்ச்சிக்காக முதல்வரோ, அமைச்சர்களோ டெல்லி செல்லவில்லை.
» புதுச்சேரியில் இருந்து கண்ணூர், திருப்பதிக்கு விமான சேவை - மத்திய அரசுக்கு கடிதம்
» அடாவடி செய்வதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!
புதுச்சேரியின் மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் எண்ணங்களை இந்த போகியில் கொளுத்தி விடுவோம். திராவிட சித்தாந்தம் உடைய ரங்காமி தென்னிந்தியாவில் காலூன்ற முடியாத பாஜக-வை புதுச்சேரியில் குறுக்கு வழியில் கொண்டு வந்தவர். தற்போது பாஜகவினர் பதவிக்கு ஆசைப்பட்டு ஆதரவளித்த சுயேட்சைகளுடன் இணைந்து லாட்டரி அதிபருடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். புதுச்சேரி அரசியல் வரலாற்றில் இதுபோல ஒரு ஆட்சி இருந்ததில்லை.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு திட்டத்தை தொடங்கினால் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே நேரத்தில் மக்களுக்கு சென்றடைகிறது. ஆனால், புதுச்சேரியில் அறிவித்த திட்டம் எல்லாம் பாஸ்ட்புட் போலத்தான் இருக்கிறது. அரிசி போடுவேன் என்பார்கள். தீபாவளிக்கு அரிசி போடுவதாக அறிவித்து அதுவும் 80 சதவீதம் போட்டார்கள். மீதமுள்ள மாதங்களுக்கு போட மாட்டார்கள்.
தற்பொழுது பொங்கல் வந்தவுடன் மீண்டும் அரிசி போடுவோம் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் போடமாட்டார்கள். இப்படி மக்கள் நலனுக்கு எதிரான ஆட்சி புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்களுக்கு எதிராக செயல்படும் ரங்கசாமி அரசு அகற்றப்பட வேண்டும். தமிழகத்தை போல் ஒரு நல்லாட்சி புதுச்சேரியிலும் அமைய வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நடக்கக்கூடிய ஆட்சி புதுச்சேரியில் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், புதுச்சேரியில் ஆளுகின்ற முதல்வர் ரங்கசாமி முழுவதுமாக பாஜகவாக மாறுவதை திமுக தடுத்துள்ளது.
புதுச்சேரி அரசு கடன் சுமையில் மூழ்கி தத்தளிக்கிறது தொழில் வளர்ச்சி இல்லை, கல்வி வளர்ச்சியில்லை.
உட்கட்சி சண்டையில் கவனம் செலுத்தும் அமைச்சர்கள் புதுச்சேரி மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை மாமனார் முதல்வராகவும், மருமகன் அமைச்சராகவும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அரசு இயந்திரங்களை முடிக்கிவிடப்பட்டும் அவர்கள் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தார்கள். பாஜகவிற்கு வாக்களிக்க புதுச்சேரி மக்கள் தயாராக இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.