விண்ணப்பிக்காத கபிலனுக்கு பாரதியார் விருதா? - நூறு பக்க ஆவணங்களை திரும்ப கேட்டு திடீர் கடிதம்!

By கி.மகாராஜன்

மதுரை: மகாகவி பாரதியார் விருதுக்கு விண்ணப்பிக்காத நபர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி, விருது விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பிய நூறு பக்க ஆவணங்களை திரும்ப தருமாறு தமிழ் வளர்ச்சித்துறைக்கு மதுரை பாரதியார் சிந்தனையாளர் மன்ற பொதுச் செயலாளர் பரபரப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக அரசு 2024ம் ஆண்டுக்கான திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், திருவிக, கி.ஆ.பெ.விசுவநாதம், பெரியார், அம்பேத்கர், கலைஞர் விருது பெறுவோர் பட்டியலை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டது. அதில் பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் விருதுக்கான விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பிய நூறு பக்க ஆவணங்களை திரும்பக் கேட்டு பாரதியார் சிந்தனையாளர் மன்ற பொதுச் செயலாளர் ஆர்.லெட்சுமிநாராயணன் தமிழ் வளர்ச்சித்துறை துணைச் செயலாளருக்கு பரபரப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், 'மகாகவி பாரதியார் விருதுக்கு நான் உட்பட 30 பேர் விண்ணப்பித்தோம். இந்த 30 பேரில் ஒருவர் கூட விருதுக்கு தேர்வாகவில்லை. விண்ணப்பிக்காத ஒருவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்காக விருதுக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட விபரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு மனு அனுப்பினேன்.

அந்த மனுவுக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. முகவரி உட்பட பிற விபரங்களை தரவில்லை. மகாகவி பாரதியார் விருதுக்கு விண்ணப்பிக்காத ஒருவரை விருதுக்கு தேர்வு செய்திருக்கும் தேர்வு நடைமுறை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும்.

நான் விண்ணப்பத்துடன் எனது பாரதியார் சிந்தனையாளர் மன்ற 30 ஆண்டு பணிகள் குறித்த நூறு பக்க ஆவணங்களையும் சேர்த்து அனுப்பியுள்ளேன். விண்ணப்பத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். நூறு பக்க ஆவணங்களை திரும்ப தந்துவிடுங்கள். தமிழக அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிகிறேன். எனவே, அந்த நூறு பக்க ஆவணங்களை திரும்ப அனுப்புவதற்கான தபால் செலவை நானே கட்டி விடுகிறேன்' எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து லெட்சுமி நாராயணன் கூறுகையில், ''விருதுக்கு நான் உட்பட 30 பேர் விண்ணப்பித்துள்ளோம். ஆனால் விண்ணப்பம் அனுப்பாத நபரை விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். இது சட்டவிரோதம். இதன்மூலம் விருதுக்கு விண்ணப்பித்த அனைவரும் தமிழ் வளர்ச்சித்துறையால் அவமதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE