இலவச வேட்டி சேலை திட்டத்தை முடக்கும் வகையில் செயல்படும் திமுக அரசு: தினகரன் கண்டனம்

By KU BUREAU

சென்னை: பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக தொடங்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு முதல் முடக்கும் வகையிலேயே செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பயனாளிகளுக்கும் விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும். திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்போடு வழங்க வேண்டிய விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படாத காரணத்தினால் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் இடம் பெறாதது ஏமாற்றம் அளித்த நிலையில், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் விலையில்லா வேட்டி, சேலையையும் முறையாக விநியோகம் செய்யப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக தொடங்கப் பட்ட விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு முதல் முடக்கும் வகையிலேயே செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு முன்கூட்டியே விநியோகிக்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகளில் 50 சதவிகிதம் கூட விநியோகிக்கப்படாமல் இருப்பதே, தற்போது ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு உரிய வேட்டி,சேலைகளை உடனடியாக அனுப்பி வைப்பதோடு, அவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தினகரன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE