பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி 67% நிறைவு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

By KU BUREAU

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் 67 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் எனவும் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி - சேலைகள் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, கடந்த 9-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சின்னமலை வேளச்சேரி பிரதான சாலையில் இயங்கிவரும் சைதாப்பேட்டை ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம், தமிழகம் முழுவதும் 34,793 ரேஷன் கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94,585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஜனவரி 11-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 1 கோடியே 47 லட்சத்து 7,584 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE