ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

By KU BUREAU

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்சன் ஆகியோருக்குச் சொந்தமான இரு படகுகளில் களஞ்சியம், முனீஸ்வரன், கார்மேகம், கண்ணன், பிரியன், சவேரியார் அடிமை, மரிய ஜான் ரெமோரோ. பிரிஸ்மன் ஆகிய 8 மீனவர்கள், வடக்கு மன்னார் கடற்பகுதியில் நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துக் கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், இரு விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். தொடர்ந்து, இரணைத் தீவு கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர்கள், கிளிநொச்சி மாவட்ட மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 8 மீனவர்களையும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

நடவடிக்கை அவசியம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது 2 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவது, மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு தூதரக நடவடிக்கைகள் மூலம், நிரந்தரத் தீர்வுகாண வேண்டியது அவசியம். மேலும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE