மிகவும் முக்கியமான பொறுப்பை பிரதமர் மோடி எனக்கு வழங்கியுள்ளார்: இஸ்ரோ தலைவர் தகவல்

By KU BUREAU

சுமார் 30 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்லும் அளவுக்கு திறன் படைத்த ராக்கெட் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் நேற்று அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் மேலக்காட்டுவிளை வந்தார். அங்கு குடும்பத்தினருடன் அவரது பெற்றோர் நினைவிடத்தில் மரியாதை செய்தார். மேலும், அங்குள்ள சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவரது மனைவி கவிதாராஜ், மகன் கைலேஷ், மகள் அனுபமா ஆகியோருடன் சுவாமிதோப்பு அன்புவனம் சென்று, அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளாரை சந்தித்து ஆசிபெற்றார். தொடர்ந்து, அய்யா வைகுண்டர் தலைமைப் பதிக்கு சென்று வழிபட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் மீதுள்ள நம்பிக்கையால், மிகவும் முக்கியமான பொறுப்பை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். நாட்டுக்கு சேவை செய்ய, பெரிய வாய்ப்பு கிடைத்ததாகவே கருதுகிறேன். நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு பிரதமர் அறிவுறுத்தல்படி, கூட்டு முயற்சி மூலம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.

எதிர்காலத்தில் சந்திரயான்-4 நிலவில் தரை இறங்க உள்ளது. விரைவில் அதற்கான பணி தொடங்கும். இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் கட்டப்பட உள்ளது. அதற்கும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கும் டாக்கிங் தொழில்நுட்பம் உதவும்.

இந்த மாதம் நேவிகேஷன் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதேபோல, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. சுமார் 30 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்லும் அளவுக்கு திறன் படைத்த ராக்கெட் தயாரிக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE