ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூரில் உள்ள பட்டாசு ஆலையில் உற்பத்திக்கு தொழிலாளர் நலத்துறை தடை விதித்திருந்த நிலையில், விதி மீறி பேன்சி ரக பட்டாசு உற்பத்தி செய்த ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூரில் சுந்தர் என்பவர் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று ராம் கணேஷ் பைரோ டெக்னிக்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் பணி வட்டாட்சியர் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்த போது, உற்பத்தி உரிமத்தில் பட்டியலிடப்பட்ட பட்டாசுகள் தவிர்த்து, விதிமீறி பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்தது தெரியவந்தது.
மேலும் ஆவணங்களை ஆய்வு செய்தபோது தொழிலாளர் நலத்துறையினர் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதித்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆலை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், உற்பத்தி உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாண்டி அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸார், சுந்தர் மீது வெடிபொருள் பாதுகாப்புச் சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து, ரூ.2 லட்சம் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்: ராம் கணேஷ் பட்டாசு ஆலையில் உரிமத்தில் பட்டியலிடப்படாத பேன்சி ரக பட்டாசுகளை விதிமீறி உற்பத்தி செய்ததால் கடந்த ஆண்டு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பின் பட்டாசு ஆலையில் உற்பத்திக்கு அனுமதி அளித்த நிலையில், மீண்டும் விதிமீறி பேன்சி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்ததால் உற்பத்தி உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
» துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: ஆக்டா வலியுறுத்தல்
» திருச்சியை 2-வது தலைநகரமாக அறிவிக்க கோரி தமிழர் தேசம் கட்சி செயற்குழு தீர்மானம்