திருச்சியை 2-வது தலைநகரமாக அறிவிக்க கோரி தமிழர் தேசம் கட்சி செயற்குழு தீர்மானம்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்ககோரி தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் அழகர், மாநில பொதுச் செயலாளர் தளவாய்ராஜேஷ், மாநில அமைப்பு செயலாளர் மகிடேஸ்வரன், தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முத்தரையர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வலையர் புணரமைப்பு வாரியத்தை செயல்படுத்தவேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிடவேண்டும். அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தொடர் தாக்குதலை தடுக்க கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். காவிரி, குண்டாறு, வைகை இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE