நிறை வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்: இபிஎஸ் பொங்கல் வாழ்த்து

By KU BUREAU

உலகத் தமிழர்கள் எல்லோரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்களது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, வீட்டினுள்ளும், வெளி வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு பால் ஊற்றி, அது பொங்கும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், விவசாயப் பெருமக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு, நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு, விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்ததை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.

அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE