இருக்கும் வேலையை விட்டுவிட்டு விவசாயத்துக்கு திரும்ப ஆசையாக உள்ளது: பொங்கல் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

By KU BUREAU

திருச்சி: இருக்கும் வேலையை விட்டுவிட்டு, விவசாயத்துக்கு திரும்ப ஆசையாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள எம்ஐடி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு, வானகம் நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம் சார்பில் ‘இயற்கை உழவர்களின் பொங்கல் விழா’ நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர், தனது மனைவி லட்சுமியுடன் புதுப் பானையில் பொங்கலிட்டார். தொடர்ந்து, தேவராட்டம், வள்ளி- ம்மி ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். கல்லூரிப் பண்ணையில் வளர்க்கப்படும் பசுமாடுகளுக்கு பொங்கல், கரும்பு ஆகியவற்றை வழங்கினார். இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் உழவர்கள் மற்றும் தொழில்முனைவோர் 45 பேருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:

நான் இங்கு சொந்த ஊருக்கு வந்ததுபோல உணர்கிறேன். ஏனெனில், நானும், எனது மனைவியும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இங்குள்ள விவசாயிகள், விளைநிலங்களைப் பார்த்தபோது, ‘இருக்கும் வேலையை விட்டுவிட்டு விவசாயத்துக்குத் திரும்பிவிடலாம்போல இருக்கிறது’ என்று மனைவியிடம் தெரிவித்தேன். விவசாயம் தான் முழு திருப்தியை தருகிறது.

அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகள் உயர்குலத்தைச் சார்ந்தவர்கள். ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்னர் செயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்தப்படடதால், மண் மலட்டுத் தன்மை மிக்கதாக மாறியது. இதை மீட்டெடுக்க வேண்டுமானால், நம்மாழ்வார் கூறியதுபோல இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பிரதமர் மோடி 2030-க்குள் நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை கொண்டுவர முயற்சிக்கிறார். ட்ரோன் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களை இயற்கை விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும். பாரம்பரிய விவசாய முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

தொடர்ந்து, இயற்கை வேளாண்மை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கண்காட்சியை ஆளுநர் திறந்து வைத்தார். விழாவில், தமிழ்நாடு வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கு.ராமசாமி, தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் இரா.செல்வராஜ், எம்ஐடி கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் இ.பிரவீன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு திருச்சி எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE