2002-ல் அதிமுக கவுன்​சிலர்களை தாக்​கியதாக வழக்கு: அமைச்சர் மா.சுப்​பிரமணியன் உள்ளிட்டோர் விடுதலை

By KU BUREAU

சென்னை: அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்குப்பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் அப்போதைய அதிமுக பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. எதிர்க்கட்சியாக இருந்த திமுக, சென்னை கண்ணப்பர் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சினை எழுப்பியது.

அப்போது, ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கவுன்சிலர்களுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அதிமுக கவுன்சிலர்கள் ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்க்கரசி, குமாரி உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீஸார், திமுகவில் மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்களாகப் பதவி வகித்த தற்போதைய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.பாபு, திமுக கவுன்சிலர்களாக பதவி வகித்த ஆயிரம் விளக்கு பி.டி.சிவாஜி (தற்போது பாஜகவில் உள்ளார்), திரு.வி.க.நகர் தமிழ்வேந்தன், பெரம்பூர் நெடுமாறன், மயிலாப்பூர் செல்வி சவுந்தர்ராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பல ஆண்டுகளாக அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவந்த இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணை நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நடந்து வந்தது. காவல்துறை தரப்பில் 70-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் நேற்று காலை தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரும் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அதையடுத்து நீதிபதி ஜி.ஜெயவேல், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கவில்லை எனக்கூறி குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE