மதுரை: ‘மேலூர் பகுதியில் நடந்து வரும் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு, மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும்’ என பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வல்லாளப்பட்டி மந்தை திடலில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
» மானாமதுரை அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைக்கு ‘சீல்’
» இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை - அரசு உத்தரவு!
இந்தியா முழுவதும் கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்த புவியியல் துறை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் இருப்பதாக 2021-ல் மாநில அரசிடம் அறிக்கை அளித்தது. அதுவரை கனிம வளம் ஏல உரிமை மாநில அரசிடம் இருந்தது. 2023-ல் அரசாணையில் மாற்றம் செய்யப்பட்டு டங்ஸ்டன் உட்பட 23 கனிமங்களை ஏலம் விடும் உரிமை மத்திய அரசுக்கு மாற்றப்பட்டது. ஏலத்தை செயல்படும் பொறுப்பு மாநில அரசுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து டங்ஸ்டன் ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. முன்னதாக மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்துக்கு மாநில அரசு பதிலளித்த போது, கனிம ஏல உரிமை மாநில அரசுக்கு தான் எனக் கூறியது. அதற்கு மத்திய அரசு அளித்த பதில் கடிதத்தில், ஏலம் விடும் உரிமை மத்திய அரசுக்கு தான். ஏலம் விட்ட பிறகு சுரங்கத்தை கவனிக்கும் பொறுப்பு தான் மாநில அரசுக்கு எனக் கூறப்பட்டது.
மேலூர் பகுதியில் வள்ளாலப்பட்டி, அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி பகுதிகளில் 4979 ஏக்கரில் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டங்ஸ்டன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 477 ஏக்கர் பரப்பளவு பல்லுயிர் தளம் உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து டெண்டர் விட்ட பிறகு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் நிரந்தரமாக வராது என்பதை பொங்கலுக்கு பிறகு சென்னைக்கு வரும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார். பொங்கல் பண்டிகை வருகிறது. மக்கள் போராட்டத்தை கைவிட்டு பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.
மத்திய அமைச்சரிடம் பேசிவிட்டு தான் இங்கு வந்துள்ளேன். மக்கள் கால் கடுக்க நடந்துள்ளீர்கள். இதை பார்க்கும் போது உங்களுக்கு கண்ணீர் வருகிறதோ இல்லையோ எங்களுக்கு கண்ணீர் வருகிறது. விரைவில் நல்லது நடக்கும்.
இங்கு சுரங்கம் நடத்துவதற்கான இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். டங்ஸ்டன் சுரங்கம் எங்கும் வேண்டாம் என மக்கள் கூறியுள்ளனர். அதை மத்திய அரசு ஏற்கிறது. சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கும் போது இந்த இயந்திரங்கள் இங்கிருந்து எடுக்கப்படும். இதனால் மக்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும். பிரதமர் மோடி சார்பில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படும் என அண்ணாமலை அறிவித்த போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டு வரவேற்றனர். மாநில பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், பாஜக மாவட்ட தலைவர்கள் ராஜசிம்மன், மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.