ராமேசுவரம்: திருப்புல்லாணியில் உள்ள சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது அங்கு பயிலும் மாணவிகள் கோலம் வரைந்து தமிழி எழுத்துகளில் பொங்கல் வாழ்த்து எழுதி அசத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் மாணவர்ளுக்கு தமிழி எழுத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 25 மாணவர்களுக்கு தமிழி எழுத்துகள் பயிற்சியை ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு நடத்தி வருகிறார். திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மகேந்திரன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.
இக்கல்வியாண்டில் இப்பயிற்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது பெரிய பொங்கல் கோலம் வரைந்து அதன் நடுவில் 'பொங்கல் வாழ்த்து' எனவும், கோலத்தின் கீழே 'இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்து' எனவும் பழமையான தமிழி எழுத்துகளில் எழுதி அசத்தினர். மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் பாராட்டினர்.