இன்று பசுபதி பாண்டியன் நினைவு தினம்... தூத்துக்குடி மாவட்டத்தில் இவற்றுக்கு தடை: பலத்த பாதுகாப்பு!

By KU BUREAU

இன்று ஜனவரி 10ம் தேதி பசுபதி பாண்டியன் 13ம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், ”தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதி பாண்டியன் 13ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல அலங்காரதட்டு பகுதியில் உள்ள பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கீழ்கண்ட விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் அனைத்தையும் இன்று 10ம் தேதி அன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே நடத்திட வேண்டும்.

மாலை 5 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை. மாலை 4 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் பிற மாவட்டத்தில் இருந்து வருவதற்கு அனுமதி இல்லை, ஊர்வலம், பால் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து செல்லுதல், அலகு குத்தி செல்லுதல் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை, நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தூத்துக்குடி நகரத்தின் உள் பகுதிகள் வழியாக வந்து செல்வதற்கு அனுமதி இல்லை.

நிகழ்சியில் கலந்து கொள்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும் என்றும் வாடகை வாகனங்களில் வந்து செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் வாகனத்தில் ஒலிபெருக்கிகள் கட்டிச் செல்ல அனுமதி கிடையாது என்றும் வாகனத்தின் மேற்கூரைகளில் யாரும் அமர்ந்து செல்லக்கூடாது என்றும் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் அதிகப்படியான நபர்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இருசக்கர வாகனங்களில் நபர்கள் வருவதற்கு அனுமதி இல்லை. சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்துறையினரின் வாகன தணிக்கையின் போது, வாகனத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதர நபர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வந்து செல்கிற வாகனங்களில் ஆயுதங்களோ, அபாயகரமான பொருட்களோ, வெடிபொருட்களோ மற்றும் மதுபானங்களையோ எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மேலும் மது அருந்தி செல்வதற்கும் அனுமதி கிடையாது.

வாகனத்தில் செல்லும் போது பிற அரசியல் கட்சியினர்/சாதியினர்/அமைப்பினர் மனம் புண்படும் வகையிலோ, வன்முறைகளை தூண்டும் வகையிலோ கோஷம் போடுவதை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் கொடிகளோ, பேனர்களோ, வாசகங்களோ கட்டி செல்லவோ, போஸ்டர்களை ஒட்டிச் செல்லவோ அனுமதி கிடையாது. நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களை காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டுள்ள தாளமுத்துநகர் பஜார் அருகில் உள்ள RC நடுநிலைப்பள்ளி எதிரே அமைந்துள்ள மாநகராட்சி மைதானத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நடந்து செல்லவும்.

மேலும் மேற்கண்ட நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்கள் தூத்துக்குடி நகரத்திற்குள் வருவதற்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. ஆகவே கீழ்கண்ட வழித்தடங்களில் வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. திருச்செந்தூர் சாலை மார்க்கமாக வரும் வாகனங்கள் திருச்செந்தூர் ரவுண்டானா, FCI ரவுண்டானா, புதூர்பாண்டியாபுரம் டோல் கேட், மதுரை பைபாஸ் ரோடு மேல அரசடி ஜங்ஷன் வழியாக கிழக்கு கடற்கரை சாலை, மாநகராட்சி குப்பைகிடங்கு சந்திப்பு வரவும்.

திருநெல்வேலி சாலை மார்க்கமாக வரும் வாகனங்கள் FCI ரவுண்டானா, புதூர்பாண்டியாபுரம் டோல் கேட், மதுரை பைபாஸ் ரோடு மேல அரசடி ஜங்ஷன் வழியாக கிழக்கு கடற்கரை சாலை மாநகராட்சி குப்பைகிடங்கு சந்திப்பு வரவும். மதுரை, கோவில்பட்டி சாலை மார்க்கமாக வரும் வாகனங்கள் எட்டையபுரம், எப்போதும்வென்றான், குறுக்குசாலை, மதுரை பைபாஸ் ரோடு மேல அரசடி ஜங்ஷன் வழியாக கிழக்கு கடற்கரை சாலை மாநகராட்சி குப்பைகிடங்கு சந்திப்பு வரவும். விளாத்திகுளம், கிழக்கு கடற்கரை சாலை (சூரங்குடி) மார்க்கமாக வரும் வாகனங்கள் குளத்தூர், வேப்பலோடை, தருவைகுளம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை மாநகராட்சி குப்பைகிடங்கு சந்திப்பு வரவும்.

தூத்துக்குடி நகரத்திற்குள் இருந்து வரும் வாகனங்கள் FCI ரவுண்டானா, புதூர்பாண்டியாபுரம் Toll Gate, மதுரை பைபாஸ் ரோடு மேல அரசடி ஜங்ஷன் வழியாக கிழக்கு கடற்கரை சாலை (ECR) மாநகராட்சி குப்பைகிடங்கு சந்திப்பு வரவும். மேற்கண்ட சாலை மார்க்கமாக வரும் அனைத்து வாகனங்களும் கிழக்கு கடற்கரை சாலை (ECR) மாநகராட்சி குப்பை கிடங்கு சந்திப்பிலிருந்து வெள்ளப்பட்டி காவல் சோதனை சாவடி (ஐயனார்புரம்), கோமஸ்புரம், சுனாமிகாலனி, சிலுவைபட்டி, தாளமுத்துநகர் பாஜார் வழியாக தாளமுத்துநகர் RC நடுநிலை பள்ளி எதிரே அமைந்துள்ள மாநகராட்சி மைதானத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு (அலங்காரதட்டு) செல்லவும். மேற்கண்ட வாகனங்கள் திரும்பி செல்லும் போது அதே வழியில் திரும்பி செல்லவும். மேற்படி நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெற காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE