பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று ​முதல் சிறப்பு பேருந்து இயக்கம்

By KU BUREAU

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கல்வி, பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்போர் தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது மட்டுமே பெரும்பாலும் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கின்றனர். இந்த வருடம் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் சூழல் உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இன்றுமுதல் சொந்த ஊர்களுக்குப் பயணிக்க ஆயத்தமாகியுள்ளனர். இதற்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக இன்றைய தினம் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 1,560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றை இணைக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயங்குகின்றன. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சாவூர் வழி பேருந்துகள் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை வழி பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்தும், இசிஆர், காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி வழி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தும் இயக்கப்படுகின்றன. பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள், வழக்கமான திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

இன்றைய தினம் சென்னையில் இருந்து மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் 1,445 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் 9 முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இன்றைய தினம் பயணிக்க 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ள நிலையில், சென்னையில் இருந்து பயணிப்பதற்காக 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் 94450 14436 என்ற எண்ணை அணுகலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (கட்டணமில்லா எண்) மற்றும் 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களை அணுகலாம்.

பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் வெளியூர் பேருந்துகளை இயக்கும் நிலையங்களை இணைக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பொங்கல் சிறப்பு இயக்கத்தையொட்டி, ஓட்டுநர், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துக் கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

ஆம்னி பேருந்து கட்டணம்: ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைவிட இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அதன்படி, சென்னை - நெல்லை இடையே இன்று பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.1,600 வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.3,300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உரிமையாளர்கள் கூறும்போது, "அரசின் ஒப்புதலுடன் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்துக்கு அதிகமாக நிர்ணயிக்கப்படவில்லை’’ என்றனர்.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்: கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE