இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

By KU BUREAU

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், அதே ஊரைச் சேர்ந்த அன்பழகன், நிகாஷ், காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன், செல்வகுமார், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கலைமணி, தங்கதுரை, செல்வகுமார், சுமித், ரமேஷ், நாகையைச் சேர்ந்த ராஜசேகர் ஆகிய 10 மீனவர்கள் கடந்த 7-ம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென் கிழக்கே, இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 10 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், படகையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களையும், படகையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE