சிறுவாணி அணையில் நீர்க்கசிவுகளை சரிசெய்ய புனே நிபுணர் குழு ஆய்வு

By டி.ஜி.ரகுபதி

கோவை: சிறுவாணி அணையில் ஏற்படும் நீர்க்கசிவுகளை சரி செய்ய, புனே குழுவினர் அணையில் நேரடி ஆய்வு செய்தனர்.

கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை, கேரள மாநிலம் பாலக்காட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 49.53 அடி ஆகும். கடந்த 2014-ம் ஆண்டின் கேரள நீர் பாசனத்துறை மற்றும் அணைகள் பாதுகாப்புக்குழுவின் அறிக்கையின்படி, நீர்க்கசிவுகள் உள்ளதால், அணையி்ன் பாதுகாப்பு கருதி 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் பல்வேறு இடங்களில் நீர்க்கசிவுகள் உள்ளன.

சிறுவாணி அணையில் முழு நீர்த்தேக்க உயரத்துக்கும் தண்ணீரை தேக்க வேண்டும் என்றால், அணையில் உள்ள நீர்க்கசிவுகளை சரி செய்ய வேண்டியது அவசியமாகும். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுவாணி அணையில் தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறுகிறது. இந்த கசிவை சரி செய்ய, புனேவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையத்தின் நிபுணர் குழுவை வரவழைத்து நேரடியாக ஆய்வு செய்ய மாநகராட்சி நிர்வாகத்தினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் முடிவு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் மாநகராட்சி பொறியாளர்கள் குழுவினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கேரளா நீர்வளத்துறை அதிகாரிகள் குழுவினர், சென்னை ஐஐடி குழுவினர், புனேவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையத்தின் நிபுணர் குழுவினர் ஆகிய ஐந்து துறைகளைச் சேர்ந்த குழுவினர் நேற்று (ஜன.8) சிறுவாணி அணையில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், குழுவினர் சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்டம், நீர் வரும் பாதை, நீர் எடுக்கப்படும் பகுதி, எந்தெந்த இடங்களில் குடிநீர் கசிவு ஏற்படுகிறது, சிறுவாணி அணையின் சுரங்கப் பகுதி உள்ளிட்ட இடங்களில் நேரடியாக ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (ஜன.9) கூறும்போது, ‘‘அணையின் நீர்த்தேக்க அளவை மீண்டும் உயர்த்த கசிவுகளை சரி செய்ய வேண்டியது அவசியம். எனவே, அணையில் புனே குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் ஆய்வு செய்து நீர்க்கசிவுகளை சரி செய்ய எந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என அறிக்கை அளிப்பர். அந்த அறி்க்கை அரசு உயரதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டது என்றால் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கசிவு சரி செய்தல் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE