புதுச்சேரி வந்த சீமானுக்கு எதிராக தபெதிக போராட்டம் - நாம் தமிழர் கட்சியினர் திரண்டதால் தள்ளுமுள்ளு!

By KU BUREAU

புதுச்சேரி: பெரியார் பற்றி தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானை சந்திக்க வந்தனர். அங்கே நாம் தமிழர் கட்சியினரும் வந்ததால், இருதரப்பையும் போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரியில் இன்று நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. இதில் சீமான் காலை 11 மணிக்கு பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கோரி அவரை சந்திக்க நெல்லித்தோப்பு சிக்னலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் குவிந்தனர்.

இந்நிலையில் பெரியார் திராவிடக் கழகத்தினர் நெல்லித்தோப்பில் இருந்து லெனின் வீதியில் நடக்கும் நாம் தமிழர் கூட்டத்துக்கு வரும் சீமானிடம் பெரியார் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு ஆதாரம் கேட்க உள்ளதாக ஊர்வலமாக புறப்பட்டனர். போலீஸார் அவர்களை தடுத்ததால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சீமான் படத்தை அடித்து தீவைத்தனர்.

மேலும், அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. அதை பிடுங்கி எறிந்தனர். போலீஸார் இதையடுத்து அவர்களை கைது செய்து வேனில் ஏற்ற தொடங்கினர். இந்நிலையில் இத்தகவல் அறிந்து கலந்தாய்வு கூட்டத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் நெல்லித்தோப்பு சிக்னல் நோக்கி வரத்தொடங்கினர். போலீஸார் அவர்களை தடுத்தனர்.

இந்நிலையில் பெரியார் திராவிடர் கழகத்தினரும் அவர்களை நோக்கி சென்றனர். ஒரு கட்டத்தில் தகராறு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. போலீஸார் இரு தரப்பினரையும் தடுத்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன் பின்னர் பெரியார் திராவிடர் கழகத்தினரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE