பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

By KU BUREAU

சென்னை: முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதிபடி பகுதி நேர ஆசிரியர்களை செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இன்று பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் இந்த நான்கு ஆண்டாக போராடி வருகின்றார்கள்.

தமிழக சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன் கீழ் அன்றைய முதல்வர் ஜெயலலிதா 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அன்று உடற்கல்வி ஓவியம் தொழிற்கல்வி போதிக்க அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கபட்டது. இதை தொடர்ந்து இதற்காக பள்ளிக்கல்வித்துறையில 177 என்ற அரசாணை 2011ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதன்படி 2012ம் ஆண்டில் பகுதி நேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் வலியுறுத்தியது. அதிமுக ஆட்சியில் சம்பளத்தை படிப்படியாக உயர்த்தி கடைசியாக 10 ஆயிரம் ரூபாயாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுதேர்தல் நடந்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என 181-வது வாக்குறுதியை கொடுத்தது. இதனால் 10 ஆயிரம் ரூபாய் தொகுப் பூதியத்தில் இருந்து, இனி காலமுறை சம்பளத்திற்கு திமுக அரசு கொண்டு வந்துவிடும் என எதிர்பார்த்தோம்.

பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வலியுறுத்தினோம். திமுக தவிர அனைத்து கட்சிகளின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள். பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். ஆனாலும் பணி நிரந்தரம் செய்யவில்லை. இறுதியாக 2023ம் ஆண்டு செப்டம்பர் முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடத்தினோம். அந்த தொடர் போராட்டத்தின் போது தான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 2,500 சம்பள உயர்வு மற்றும் 10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என இரண்டு அறிவிப்பை 2023ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அன்று வெளியிடக் கேட்டு கொண்டார்.

ஆனால், இந்த சம்பளம் போதாது, தேர்தலில் சொன்ன வாக்குறுதிபடி வேலையை நிரந்தரம் செய்ய வேண்டும் என போராட்டத்தை தொடர்ந்தோம். இதனால் 2023ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி அன்று விடியல் காலையில் கைது செய்து போராட்டத்தை கலைத்து விட்டனர். இரண்டு அறிவிப்பில் 2,500 ரூபாய் சம்பள உயர்வை மட்டுமே மூன்று மாதங்கள் கடந்த பின்னர் 2024ம் ஆண்டு ஜனவரியில் அரசாணை வெளியிட்டு வழங்கப்பட்டது. மருத்துவ காப்பீடு 10 லட்சம் அறிவிப்பு குறித்து ஒரு தகவலுமே தெரியவில்லை. சம்பள உயர்வாக கொடுத்த 2,500 ரூபாயை, ஏற்கனவே கிடைத்த 10 ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக 12,500 ரூபாயாக கொடுக்காமல் இதுவரை இரண்டு பரிவர்த்தனையாக பட்டுவாடா செய்யப்படுவதால் தாமதம் ஆகிறது. இது மனதளவில் பாதிக்கிறது.

மேலும் இந்த வேலைக்கு சேர்ந்தது முதல் இந்த 13 ஆண்டுகளாக மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்பட அரசின் பணப் பலன்களும் இதர சலுகைகளும் கிடைக்கவே இல்லை. இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம். இறந்துபோன ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கவில்லை. ஓய்வு பெற்றவர்களுக்கும் பணிக் கொடை வழங்கவில்லை. இதனால் 4 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் தற்போது 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு இந்த வேலையை நிரந்தரம் செய்தால் மட்டுமே எஞ்சிய காலத்தை நல்லபடியாக வாழ முடியும்.

திமுக ஆட்சிக்கு வந்து 44 மாதங்கள் முடிந்துவிட்டது, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் முடிய போகிறது. இந்த ஐந்து ஆண்டு சட்டசபை காலத்தில் இன்னும் ஒரே ஒரு முழுமையான பட்ஜெட் மட்டுமே இருக்கிறது. அதில் பணி நிரந்தரம் செய்ய தேவையான நிதியை ஒதுக்கி, பகுதி நேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்போது ஆண்டுக்கு மே மாதம் தவிர்த்து 11 மாதங்களுக்கும் ₹12,500 தொகுப் பூதியத்திற்காக 160 கோடி ரூபாய் ஆகிறது. சிறப்பாசிரியர்கள் நிலையில் பணியமர்த்தி காலமுறை சம்பளமாக வழங்க ஆண்டுக்கு சுமார் 450 கோடி ஆகும்.

இதற்காக தற்போது ஆகும் 160 கோடியில் இருந்து, மேலும் 250 கோடியில் இருந்து ஒரு 300 கோடி தேவைப்படும். இதை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், 13 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்ப நலன் கருதியும், மனிதாபிமானம் கொண்டு முதல்வர் ஸ்டாலின் செய்ய வேண்டும். இந்த வேலைக்கு சேர்ந்ததுமுதல் இதுவரை பொங்கல் போனஸ் வழங்கவில்லை.

இந்த முறையாவது பொங்கல் போனஸ் கிடைக்க செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும். அதுபோல அரசின் கொள்கை முடிவாக திமுக தேர்தல் வாக்குறுதி 181-ஐ அரசாணையாக்கி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலே செய்ய வேண்டும்" என்று செந்தில்குமார் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE