சென்னை: திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: “திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ள துயர நிகழ்வை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இந்தச் சோகச் சம்பவத்தில் உற்றாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்." என்று முதல்வர் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்: "திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தினகரன் கூறியுள்ளார்.