சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் திமுக அரசு ஏன் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கிறது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அண்ணா நகரில், சிறுமி ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான போக்சோ வழக்கில், சிறுமியின் பெற்றோர்களைக் காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும், அதிகாலை வரை, அவர்களை, காவல் நிலையத்தில் வைத்திருந்து துன்புறுத்தியதாகவும், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை என்றும் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கியக் குற்றவாளியான சதீஷ் என்ற நபர், ஊடகத்தில் வெளியான செய்திக்குப் பிறகு, செப். 12-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால், 14 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சிறுமியின் பெற்றோர்களைக் காவல் ஆய்வாளர் தாக்கியதாக வந்த செய்தி, விசாரணையில் பொய் என்று கண்டறியப்பட்டதாகவும் திமுக அரசு மறுப்பு வெளியிட்டது.
இந்த மறுப்பு வெளியீட்டில், 12.09.2024 அன்று கைது செய்யப்பட்ட சதீஷ் குறித்த விவரங்கள் எதுவுமில்லை. கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு விசாரணையும், உயர் நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பெயரில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில், காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை முறையாக நடைபெறாமல், கால தாமதமாக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில், அண்ணா நகர் காவல் ஆய்வாளர் ராஜி, விசாரணைக்கு இடையூறாக இருந்த அதிமுக நிர்வாகி ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
முழுக்க முழுக்க அலட்சியமாகவும், வழக்கு விசாரணையைத் திசைதிருப்பும் போக்கிலும் செயல்பட்டு, ஊடகத்தில் வந்த செய்தி பொய் என்று செய்தி வெளியிட்ட திமுக அரசு, தற்போது என்ன பதில் கூறப்போகிறது? மேலும், சிறுமியின் பெற்றோர்களைக் காவல் ஆய்வாளர் தாக்கவில்லை என்று விசாரணை நடத்தி தெரிவித்த அதிகாரி யார்? பொய் கூறிய அவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? அண்ணா நகர் சிறுமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி என, தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தி, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.