சென்னை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து நடந்த பேரணியில் காவல் துறையின் அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏகமனதாக கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை முழுமனதாக மேலூர் மக்கள் வரவேற்றுள்ளனர்.நேற்று நடந்த பேரணியுமே இத்திட்டத்தை முழுமையாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையோடுதான் நடந்தது. இப்படியான நிலையில் நேற்று நடந்த பேரணியில் DYFI யின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் தமிழரசனை மட்டும் காவல்துறை குறிவைத்து இழுத்துச் சென்றது ஏன்?
மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இத்திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர் தோழர் தமிழரசன்.சமீபத்தில் DYFI நடத்திய மூன்று நாட்கள் நடைபயணத்தின் பொறுப்பாளர் அவர்.
ஆயிரக் கணக்கான மக்கள் கூடிய பேரணியில் அவரை மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல் துறை காரில் ஏற்ற முயன்றது ஏன்? அங்கிருக்கும் மக்கள் தமிழரசனை காவல்துறையிடமிருந்து மீட்டிருக்காவிட்டால் காவல்துறை தமிழரசனை என்ன செய்திருக்கும் என்கிற கேள்விகள் எழுகின்றன.
» திருப்போரூர் கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரிமையாளரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
» யுஜிசியின் புதிய விதிகள் என்பது மாநில அரசு மீது தொடுக்கப்படும் யுத்தம்: சி.வி.சண்முகம் ஆவேசம்
காவல் துறையின் இந்த அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்