சென்னை: திருப்போரூர் கோயில் உண்டியலில் விழுந்த செல்போனை ஏலத்தில் விட்டோம். அதன் உரிமையாளர் தினேஷ் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக் கொண்டார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
சென்னையில் இன்று நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் அம்பத்தூரை சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தரிசனம் செய்ய வந்துபோது தன்னுடைய ‘ஐபோன் 13 புரோ’ ரக போனை தவறுதலாக உண்டியலில் போட்டுள்ளார். இதன்பின்னர் கோயில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல்போனை திரும்பக் கேட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி ஆய்வு செய்து உண்டியலுக்கு வரும் பணத்தை தவிர தங்கம், வெள்ளியாக இருந்தாலும் அவற்றை கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அதனை ஏலத்தில் விடுவதுதான் நடைமுறையாகும். அந்த வகையில் உண்டியலில் விழுந்த செல்போனை ஏலத்தில் விட்டோம். அதன் உரிமையாளர் தினேஷ் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக் கொண்டார்’ எனத் தெரிவித்தார்