விருதுநகர்: ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதோடு மஞ்சள் கொத்துக்களையும் அரசு கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அதோடு, வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா பொங்கல் கொண்டாடுவதும் சிறப்புக்குரியது. பொங்கல் வழிபாட்டில் கரும்புக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் வகிப்பது பொங்கல் பானையில் கட்டப்படும் மஞ்சள் கொத்து.
விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மஞ்சள் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்ற பொங்கல் தொகுப்பை வழங்கும் அரசு இந்த ஆண்டு மஞ்சள் கொத்துக்களையும் கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்போடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஞ்சள் சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
» கோவையில் சிறப்பாக முன்னேறிய திருநங்கையருக்கு விருதுடன் ரூ.1 லட்சம் பரிசு: ஆட்சியர் அறிவிப்பு
» ‘யார் அந்த சார்?’ என எதிர்க்கட்சிகள் கேள்வி: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்!
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகே உள்ள சூரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி மலைராஜ் (62) கூறுகையில், ''மஞ்சள் பயிர் மங்களகரமான பணப்பயிர். ஆடியில் மஞ்சள் கிழங்கு நடவு செய்ய வேண்டும். 3 மாதத்தில் பூக்கும் பருவம் வந்துவிடும். பூத்ததும் அறுவடைக்கு மஞ்சள் தயாராகி விடும்.
இந்த ஆண்டு ஒரு கொத்து மஞ்சள் குறைந்தபட்சம் ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.22 வரை விலைபோகிறது. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்தால் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். பொங்கலுக்கு அறுவடை செய்யாமல் மேலும் 2 மாதம் கழித்து அறுவடை செய்தால் ஒரு மஞ்சள் கொத்து சுமார் 3 கிலோ வரை கிடைக்கும். அப்போது ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை விலை கிடைக்கும்.
ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பில் கரும்பை அரசு கொள்முதல் செய்வதுபோல், மஞ்சள் கொத்துக்களையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்போடு இணைந்து கொடுத்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். எனவே, இந்த ஆண்டு முதல் மஞ்சள் கொத்துக்களையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்ய முன்வர வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.