மதுரை வடக்கு தொகுதியில் மீண்டும் களமிறங்கும் திமுக மாவட்டச் செயலாளர்: சுவர் விளம்பரத்தால் பரபரப்பு!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு இருக்கும்நிலையில், மதுரை வடக்கு தொகுதியில் திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி மீண்டும் போட்டியிடுவதாக கூறி அவரை பெயரை குறிப்பிட்டு ஆதரவாளர்கள் சுவர் விளம்பரம் செய்து வருவது, அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு இருக்கும்நிலையில் திமுக, அதிமுக, பாஜக, போன்ற கட்சிகள் பலமான கூட்டணி உருவாக்க பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்கள். அதனால், எந்த கட்சிகள், எந்த கூட்டணியில் செல்கிறது என்பது தேர்தல் இறுதிக்கட்டத்தில்தான் தெரிய வரும். அதன்பிறகு ஒவ்வொரு கட்சிகளிலும் வேட்பாளர்கள் முடிவு செய்வார்கள்.

ஆனால், அதற்குள் மதுரை வடக்கு தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சி மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி போட்டியிடுவதாக கூறி அவரது ஆதரவாளர்கள் சுவர் விளம்பரம் செய்து வருகிறார்கள். இவர் தற்போது இந்த தொகுதி எம்எல்ஏ-வாக உள்ளார். மீண்டும் இந்த தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கு தயாராகி வருவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

ஆனால், கட்சித்தலைமை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே, இப்படி தொகுதிக்குள் வேட்பாளராக கோ.தளபதியை அறிமுகம் செய்து சுவர் விளம்பரம் செய்வது நியாயமா? என அக்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தொகுதிக்குள் இப்படி தன்னை வேட்பாளராக அறிமுகம் செய்து சுவர்விளம்பரம் செய்வது மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி கவனத்திற்கு சென்றுள்ளதா? அல்லது கவனத்திற்கு சென்றிருந்தால் அவர்களை அழைத்து மாவட்டச் செயலாளர் கண்டித்து இருக்கலாமே? என கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பொதுவாகவே, திமுகவில், ஒவ்வொரு முக்கிய சட்டமன்ற தொகுதியிலும் யார், யார் போட்டியிடக்கூடும் என்று முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கும் என்றும், அந்த தொகுதிகளுக்கு கட்சியினரை விருப்பமனு கொடுக்க வைப்பது, நேர்காணல் நடத்துவது போன்றவை கண்துடைப்பு நடவடிக்கை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. அதை உறுதி செய்வது போலவே, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான கோ.தளபதியை குறிப்பிட்டு அவரது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இப்படி சுவர் விளம்பரம் செய்வதும் உள்ளதாக சொல்லப்படுகிறது. கட்சிக்கட்டுப்பாட்டை மாவட்டச் செயலாளரே இப்படி மீறலாமா? என மாநகர திமுகவினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE