முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன், மேல்மலையனூர் முன்னாள் எம்எல்ஏ ஆர்.தமிழ்மொழி ராஜதத்தன் ஆகியோர் மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு, பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, நேற்று பேரவை கூடியதும், மேல்மலையனூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.தமிழ்மொழி ராஜதத்தன் மறைவுக்கு இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரங்கல் தீர்மானத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேசியதாவது: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த டிச. 26-ம் தேதி காலமானார். 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்துக்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு முன்னெடுப்புகள், திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியவர். அறிவாற்றல், அமைதி, ஆளுமை, ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றை ஒருங்கே அமையப் பெற்றவர். தமிழக மக்கள் மீதும், முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதும் கொண்டிருந்த அவர் கொண்டிருந்த அன்பின் காரணமாக, சிறப்புமிகு திட்டங்களை தமிழக வளர்ச்சிக்காக தந்தவர். மத்திய நிதி அமைச்சராகவும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவராகவும், மத்திய நிதிக்குழுத் தலைவராகவும், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் திறம்பட பணியாற்றியவர்.
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த டிச. 14-ம் தேதி காலமானார். பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த அவர் 1985 முதல் 1988-ம் ஆண்டுகளில் சத்தியமங்கலம், 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்குதொகுதியில் இருந்தும் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். மேலும் 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை கோபி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். அன்புடன் பழகும் பண்பாலும், திறம்பட பணியாற்றும் பாங்காலும் அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும் பெற்றவர். இவ்வாறு அவர் பேசினார்.
» மன்மோகன் அமைச்சரவையில்தான் தமிழர்கள் அதிக அளவில் கோலோச்சினர்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
» புதுவையில் சர்வதேச யோகா திருவிழா நிறைவு - சென்னை முகிலன், ரேனுஸ்ரீ சிறந்த வெற்றியாளர்களாக தேர்வு
இருவரது மறைவுக்கும் இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றவும், மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் பேரவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.