வேலூர்: வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர்ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் இவரது மகனும் கதிர் ஆனந்தின் அறக்கட்டளை சார்பில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் நடத்தப்பட்டு வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்புடன் அண்மையில் சோதனை நடந்து முடிந்தது.
பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட 2 இடங்களில் நடைபெற்ற 8 மணி நேர சோதனையில் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.28 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கிடைத்த ரூ.8 லட்சம் பணம் அவர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 44 மணி நேரம் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அமலாக்கத் துறையின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மீண்டும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் சோதனை நடத்த தொடங்கினர். இது தொடர்பாக விசாரித்தபோது, “கல்லூரியின் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் இருந்த 2 அறைகளுக்கு ஏற்கெனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றனர். அந்த அறைகளில் சோதனை நடத்துவதற்காகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்ததாக தெரிவித்தனர்.
» புதுவையில் சர்வதேச யோகா திருவிழா நிறைவு - சென்னை முகிலன், ரேனுஸ்ரீ சிறந்த வெற்றியாளர்களாக தேர்வு
» திருவள்ளூர் அருகே உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு