திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வீட்டின் மாடிக்கு சென்று எலுமிச்சை மரத்தில் எலுமிச்சை காய்களை பறித்த போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்தார். தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், மின்சார வாரிய அதிகாரிகளுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அருகே உள்ள பட்டரைப்பெரும்புதூர் ஊராட்சிக்குட்பட்ட வரதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி லோகேஸ்வரி (27). இவர் இன்று மதியம் தன் வீட்டு வளாகத்தில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து, எலுமிச்சை காய்களை பறிப்பதற்காக மாடிப்பகுதிக்கு சென்றார். அப்போது, அவர் எலுமிச்சை காய்களை பறிக்க பயன்படுத்திய கம்பி, அந்த வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியது.
இதனால், உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட லோகேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே லோகேஸ்வரி உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வரதாபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பிகளை அகற்றவேண்டும், பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்தான் லோகேஸ்வரி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் எனக் கூறி, அவரின் உறவினர்கள், மருத்துவமனை எதிரே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
» முட்டுக்காடு படகுத்துறையில் ரூ.5 கோடி மதிப்பில் நவீன மிதக்கும் படகு உணவகம் திறப்பு!
» அம்பத்தூர் விநாயகர் கோயிலில் 5 வெண்கலச் சிலைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
இதனால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆகவே, சம்பவ இடம் விரைந்த திருவள்ளூர் டவுன் போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.