மதுரை: மதுரை மாநகராட்சியுடன் இணைவதால் 16 கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் நிறுத்தப்படுமோ? சொத்து வரி உயர்த்தப்படுமா? என்ற கவலை கிராம மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலே மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சியுடன் பரவை பேரூராட்சி, கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம், காதக்கிணறு, அரும்பூனூர், கொடிக்குளம், செட்டிக்குளம், கோவில் பாப்பாக்குடி, ஆலாந்தூர், பேச்சிகுளம் விரகனூர், நாகமலைபுதுக்கோட்டை, கரடிப்பட்டி, ஏற்குடி அச்சம்பத்து, துவரிமான், பெருங்குடி ஆகிய 16 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. இந்த மாநகராட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கிராம ஊராட்சிகள் மூலம், கிராமங்களில் வசிக்கும் ஆண்கள், பெண்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தினமும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தற்போது மாநகராட்சியுடன் இணைவதால் இந்த திட்டம் நிறுத்தப்படுவதாகவும், வேலைவாய்ப்பு பறிபோய் விடுவதாகவும் கூறப்படுவதால் கிராம புற மக்கள், மாநகராட்சியுடன் இணைவதற்கு தயங்குவதாக கூறப்படுகிறது.
கிராம ஊராட்சிகளில் பெரும்பாலானவர்கள், தங்கள் வீடுகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துவதே கிடையாது. கிராம ஊராட்சி நிர்வாகத்தினர், கட்டாயப்படுத்தி வரி வசூல் செய்யவும் வர மாட்டார்கள். தற்போது மாநகராட்சியுடன் இணைவதால் சொத்து வரி பல மடங்கு உயரும் என்றும், மேலும், வரியையும் 6 மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டிய இருக்கும் என கருதுகிறார்கள். அதனாலே, மக்கள் மாநகராட்சியுடன் தங்கள் பகுதிகளை இணைக்க வேண்டாம் என போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.
» எச்.எம்.பி.வி வீரியமற்ற வைரஸ்; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை - மா.சுப்பிரமணியன் நம்பிக்கை
» ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ல் இடைத்தேர்தல் - காங்கிரஸ் களமிறங்குமா?
இந்நிலையில் தமிழக அரசு, மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ''விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆட்சேபனைகள் இருந்தால் ஆணை வெளியிடப்பட்டு 6 வாரங்களுக்குள் முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு கருத்துக்களை அனுப்பலாம்,'' என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநரகாட்சி அதிகாரிகள் கூறுகையில், ''மாநகராட்சி விரிவாக்கம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் இனி நடைபெற வாய்ப்பு இல்லை. அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் அடுத்தக்கூட்டமாக, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளை இணைக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிராம ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைவதால் இதுவரை அந்த உள்ளாட்சி அமைப்புகளில் செல்வாக்குடன் இருந்து வந்த முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், மீண்டும் அப்பகுதிகளுக்கு வர முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி தேர்தலில் அவர்கள் இனி கவுன்சிலர் தேர்தலில்தான் நிற்க முடியும். அதிகாரமிக்க பஞ்சாயத்து தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிக்கு வர முடியாது என்பதால் மக்கள் போராட்டத்தை அவர்கள் தூண்டிவிடுவதாக கருதுகிறோம்.
அவர்கள் பின்னணியில் சில இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இணைக்கப்படாத பகுதிகளை சேர்ந்த குடியிருப்புகள், கிராமங்களை சேர்ந்த மக்கள், மாநகராட்சியுடன் இணைந்தால் வாழ்வாதாரம் உயரும் என்பதால் தங்களை இணைக்க கோரியும் எங்களிடம் மனு கொடுத்து வருகிறார்கள். ஏற்கெனவே கடந்த 14 ஆண்டிற்கு முன் இணைக்கப்பட்ட புறநகர் 28 வார்டுகளில் தற்போது வரை பழைய வரியே மக்கள் செலுத்தி வருகிறார்கள்.
மாநகராட்சிக்கு இணையாக தற்போது வரை வரி உயர்த்தப்படவில்லை. வணிக கட்டிடங்கள் வரிதான் உயர்த்தப்படுகிறது. மாநகராட்சி வரி சதவீதம் உயர்த்தப்பட்டாலும், அந்த பழைய வரி அடிப்படையிலே அவர்கள் வீடுகளுக்கு சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இதுபோல், குறிப்பிட்ட காலம் வரை சொத்து வரி உயர்த்தப்படாது என்ற வாய்மொழி உத்தரவு அடிப்படையிலே புறநகர் கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்படுகிறது.
பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தொடடங்கப்பட உள்ளதால் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி நிறைவேற்றப்படும். கிராம பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் நிறுத்தப்பட்டாலும், அதற்கு பதிலாக நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராம புற மக்களுக்கு தொடர்ந்து அதே ஊதியத்தில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
அதனால், வேலைவாய்ப்பு பறிபோய்விடும் என்பதில் அர்த்தமில்லை. குடிநீர், சாலை, பாதாளசாக்கடை மற்றும் சுகாதாரம் போன்றவை நகர்புறங்களை போல் நிறைவேற்றி கொடுப்பதால் மக்கள் வாழ்க்கை தரம் உயரும். பொய் தகவல்களை பரப்போரை பற்றி கவலைப்படாமல் மக்கள் தைரியமாக மாநகராட்சியுடன் இணைவதற்கு தயாராகலாம்,'' என்றனர்.