தென்காசி: தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுகவினர் சங்கரன்கோவிலில் ஆட்டுக்குட்டியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவை மாண்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி காக்கத் தவறியதாக கூறியும், ஆளுநரைக் கண்டித்தும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்காசி ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, தென்காசி நகராட்சி தலைவர் ஆர்.சாதிர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆளுநரைக் கண்டித்து கோஷமிட்டனர்.
இதேபோல் சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான தங்கவேலு தலைமை வகித்தார்.
» ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ல் இடைத்தேர்தல் - காங்கிரஸ் களமிறங்குமா?
» திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் - 260 பேர் கைது
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் செண்பக விநாயகம், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட அவை தலைவர் பத்மநாபன், மதிமுக மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் லிங்கவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்டுக்குட்டியை கொண்டுவந்த திமுகவினர் அதன் கழுத்தில் ஆட்டுக்கு தாடி எதற்கு, தமிழ் நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்ற வாசகம் பொறிக்கப்பட்ட அட்டையை மாட்டி நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.