திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் - 260 பேர் கைது

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மகுடபதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எழில்வளவன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராஜசேகர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊராட்சி செயலாளருக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் கணினி உதவியாளர்கள் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்துதல் வேண்டும், கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, பேருந்துநிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 260 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE