சென்னை: தமிழக சட்டப்பேரவையை அவமதித்ததற்காக ஆளுநர் ஆர்.என். ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாரம்பரியமாக தமிழக சட்டப்பேரவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்து வருகிறதோ, அதே நிகழ்வுகள் தான் தற்போதும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அதை மாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி இறங்குகிறார். அது நடக்காது என்பதாலும், ஆளுநர் உரையை வாசித்தால் திமுகவின் சாதனைகளை வரிசையாக அடுக்க வேண்டும் என்பதாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க கூடாது என்ற காரணத்தால்தான் அவர் இவ்வாறு நடந்து கொண்டார்.
ஆளுநர் உரையில் திமுக ஆட்சியின் சாதனைகளை படிப்பதற்கு தயங்கி இந்த நாடகத்தை ஆளுநர் நடத்தியிருக்கிறார். ஆனால் தேசியகீதம் முதலில் பாடப்படவில்லை என்று ஒரு காரணம் சொல்கிறார். திமுகவுக்கு பாடம் நடத்துகிற தகுதி ஆளுநருக்கு கிடையாது. திமுகவை பொறுத்தவரை தேசபக்தியில் இவர்களுக்கு எல்லாம் குறைந்தவர்கள் கிடையாது.
முன்பு அதிமுக ஆட்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட்டது. இன்றும் அப்படித்தான். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் ஆளுநர் உரையை வாசித்து முடித்தபின் தேசிய கீதம் பாடப்பட்டது. முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறோம்.
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ ஜன. 07, 2025
» நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி அறிவிப்பு
தேசிய கீதத்துக்கு தமிழக மக்கள் என்றும் அவமரியாதை செய்ய மாட்டார்கள். எனவே இதுபோன்ற ஒரு நாடகத்தை நடத்தியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவையை அவமதித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.