தேசிய கீதம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்ட பின்னரும் அதையே பிரச்சினையாக குறிப்பிட்டு, ஆளுநர் உரையைப் படிக்காமல் சென்று விட்டது, அவரது உண்மையான நோக்கம் என்ன என்பதைக் கேள்விக்குறியாக்குகிறது என்று சட்டப்பேரவையில் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு அளித்த உரையை புறக்கணித்து வெளியேறினார். இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு முழுமையாக வாசித்தார். அதன்பின், அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்து பேசியதாவது:
கடந்த, 2023-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் பேரவையில் உரையாற்றும் போது, அவரால் ஒப்பளிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றுள்ள சில பகுதிகளை வேண்டுமென்றே விடுத்தும், அச்சிடப்படாத சில பகுதிகளைச் சேர்த்தும் உரையாற்றினார்.
முதல்வர் எழுந்து பேரவைத்தலைவரின் இசைவுடன், இனிய தாய்மொழியான தமிழில், தீர்மானத்தை மொழிந்தது, ஆளுநருக்கு அப்போது புரிந்திருக்காது. தொடர்ந்து, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் பேரவையில் உரையாற்றும் போதும், இதே முறையைத் தொடர்ந்ததால் அன்றைக்கு என்னால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் விடுவிப்பை எதிர்த்த மறுஆய்வு மனு தீர்ப்பு தள்ளிவைப்பு
» உறைபனியால் உதகையில் கடும் குளிர்: அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரி பதிவு
தமிழக சட்டப்பேரவையின் புகழ் மங்கி விடாமல் பாதுகாத்து நிற்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 176-இன்கீழ் ஆண்டு தொடக்க கூட்டத்தொடரிலும் ஆளுநர் உரை நிகழ்த்துவதை அரசியல் சட்டத்தில் மிக விவரமாக தெரிவித்துள்ளனர். ஆனால், ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இது நல்ல விஷயமல்ல. கடந்த 1995ம் ஆண்டில் இதே அவையில் அப்போதைய ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இருந்தும் கூட 1996ல் அவர் அரசு தயாரித்து அளித்த உரையை வாசித்தார்.
அதே போல், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு, ஆளுநர் பதவி குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், ஆளுநர் பதவி உள்ள வரை, அவருக்குரிய மரியாதை அளிக்கப்பட வேண்டுமென்ற கருத்து கொண்டவர். கடந்த பேரவைக் கூட்டத்தொடரை முடித்து வைக்காமல், ஆளுநர் உரையைத் தவிர்த்து, மற்ற சில மாநிலங்களில் முடிவெடுப்பது போன்று, நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம். ஆனால், முதல்வர் நாம் மரபு மீறக்கூடாது என்ற பண்போடு ஆளுநர் உரைக்காக பேரவையைக் கூட்ட யோசனை வழங்கினார். மீண்டும் ஆளுநர் முந்தைய ஆண்டுகளில் செய்ததைப்போல், உரையை முழுமையாகப் படிக்காமல் சென்றிருக்கிறார்.
தற்போது ஆளுநர், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசியகீதம் பாடப்படாதது தொடர்பாக ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, கடந்த ஆண்டு அவர் எழுதிய கடிதத்துக்கு, பதிலளிக்கப்பட்டது. இந்த அவையில் பின்பற்றப்படும் மரபின் அடிப்படையில் ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், உரையின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவதே பின்பற்றப்பட்டு வருவதை தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மீண்டும் இன்று அதையே ஒரு பிரச்சினையாக ஆளுநர் குறிப்பிட்டு, அவர் அரசு அனுப்பிய உரையைப் படிக்காமல் சென்று விட்டது, அவரது உண்மையான நோக்கம் என்ன என்பதைக் கேள்விக்குறியாக்குகிறது.
இந்த நாட்டின் மீதும், தேசிய கீதத்தின்மீதும் பெரும் மதிப்பை தமிழக மக்களும், இந்தப் பேரவை உறுப்பினர்களும் என்றென்றும் கொண்டுள்ளார்கள். தேசிய ஒருமைப்பாட்டிலும், நாட்டுப் பற்றிலும், தேசத் தலைவர்கள் மீதும் என்றும் மாறாத நன்மதிப்பினைக் கொண்டது இந்த அரசு. இந்த சட்டப்பேரவையின் மாண்பை நிலைநாட்டும் வகையில், பேரவை விதி 17ஐத் தளர்த்தி, தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
தீர்மானம்: தமிழக அரசால் விதிகள்படி அனுப்பி வைக்கப்பட்ட உரையைப் படிக்காமல் ஆளுநர் சென்றுவிட்டார். ஆளுநரு்ககு அனுப்பி வைக்கப்பட்ட உரை அச்சிடப்பட்டு அவையின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, நூறாண்டு வரலாற்றுப் பெருமைகொண்ட இம்மாமன்றத்தின் மக்களாட்சி மாண்பினை உயர்த்திப் பிடிக்கவும், மரபைக் காத்திடவும், அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் பதிவுசெய்திட வேண்டுமென்ற தீர்மானத்தை நான் மொழிகிறேன். இவ்வாறு துரைமுருகன் பேசினார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.