உறைபனியால் உதகையில் கடும் குளிர்: அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரி பதிவு

By KU BUREAU

உறைபனிப் பொழிவு காரணமாக உதகையில் கடும் குளிர் நிலவுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 2,500 மீட்டர் உயரத்துக்கு மேல் அமைந்திருக்கும் உதகை நகரில், பனிக்காலத்தில் உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். நவம்பரில் தொடங்கி பிப்ரவரி இறுதி வரை உறைபனி நிலவும். வெப்பநிலை மிகவும் குறைந்து, பல பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸை எட்டும் என்பதால், கடும் குளிரான காலநிலை நிலவும்.

கடந்த ஆண்டு இறுதியில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, உதகையில் உறை பனி மிகவும் தாமதமாகவே தொடங்கியிருக்கிறது என்றாலும் தற்போது அதிகமாக காணப்படுகிறது.

இரவு நேரங்களில் வழக்கத்துக்கு மாறான குளிர் நடுங்கச் செய்வதால் மாலை, காலை வேளைகளில் நகரில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. உதகை, தலைகுந்தா, கேத்தி பள்ளத்தாக்கு, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் புல்வெளிகள், விளைநிலங்கள் என காலையில் பார்க்கும் இடங்களெல்லாம் வெண் கம்பளம் விரித்தார்போல் உறை பனி கொட்டிக் கிடக்கிறது.

அவலாஞ்சி உட்பட்ட சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்சியஸுக்கும் கீழ் சரிந்திருக்கிறது. அவலாஞ்சியில் நேற்று அதிகாலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸும், உதகையில் 2.3 டிகிரி செல்சியஸும் பதிவானது. இதனால், வெம்மை ஆடைகளை அணிந்தும், தீ மூட்டியும் குளிரில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து வருகின்றனர். குறிப்பாக, கேரட் அறுவடையில் ஈடுபட்டுவரும் பல்லாயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள், உறை பனியின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE