ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்பகுதியில் கழிவு நீர் கலப்பு: சிஐடியு நூதன போராட்டம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்பகுதியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி துடைப்பத்தை கொண்டு தூய்மைப்படுத்தும் நூதனப் போராட்டத்தை சிஐடியு சார்பாக திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சிவாஜி, கருணாமூர்த்தி, சுடலைகாசி, ராமச்சந்திரபாபு, சீனிவாசன், முருகன், ஆரோக்கிய நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து சிஐடியு மீனவ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள பல்வேறு தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அக்னி தீர்த்த கடற்பகுதியில் கலக்கிறது. மேலும், பல்வேறு கழிவுகளும், குப்பைகளும் கடற்கரை ஓரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் அக்னி தீர்த்தக் கடலில் நீராடும் பக்தர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொது நல வழக்கு மீதான விசாரணையில், அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர் கலக்கவில்லை, சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படுகிறது என்று உண்மைக்கு மாறான பதிலை ராமேசுவரம் நகராட்சி தெரிவித்துள்ளது. நகரகாட்சி மீது நடவடிக்கை எடுப்பதுடன், அக்னி தீர்த்தக் கடற்கரையில் கழிவு நீர் கலப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE