தென்காசியில் அரிவாள், கத்தி தயாரிப்புக்கு போலீஸார் கட்டுப்பாடு

By கி.மகாராஜன்

மதுரை: தென்காசி மாவட்டத்தில் அரிவாள், கத்தி, கடப்பாரை, சுத்தியல் தயாரிப்புக்கு போலீஸார் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான வழக்கில் தமிழக டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் வாவநகரத்தை சேர்ந்த சப்பானி என்ற சேகர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம் வடகரை நகராட்சி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இரும்புப் பட்டறை வைத்து அரிவாள், கத்தி, கடப்பாரை, சுத்தியல் மற்றும் விவசாய வேலைக்கான பொருட்கள் தயாரிப்பு தொழில் செய்து வருகின்றனர். விவசாய வேலைக்கான பொருட்கள் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அதிகளவில் விற்பனையாகும். இதனால் இந்த மாதங்களில் அதிகளவில் உற்பத்தி நடைபெறும்.

இந்நிலையில் அரிவாள், கத்தி, கடப்பாரை, சுத்தியல் உள்ளிட்ட இரும்பு பொருட்களின் உற்பத்திக்கு தடை விதித்து தென்காசி எஸ்பி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். இரும்பு பொருட்களின் உற்பத்திக்கு அரசு தடை விதிக்கவில்லை. இருப்பினும் பட்டறைகளில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இரும்பு பட்டறைகளில் தயாரிக்கப்படும் அரிவாள், வேல் உள்ளிட்ட இரும்பு பொருட்கள் அய்யனார், பத்திரகாளி, மாரியம்மன், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு காணிக்கையாக வழங்கப்படுகிறது. அரிவாள் வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்பொருட்களை தயாரிக்கவும், விற்கவும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என டிஜிபி ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

ஆனால் தென்காசியில் எஸ்பி, டிஎஸ்பி மற்றும் குற்றாலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் அதிக கட்டுப்பாடுகளை விதித்து இரும்பு பட்டறை தொழிலாளர்களை துன்புறுத்தி வருகின்றனர். எனவே, தென்காசி மாவட்டத்தில் இரும்பு பட்டறை தொழிலாளர்கள் அரிவாள், கத்தி, கடப்பாரை, சுத்தியல் போன்ற விவசாயம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இரும்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் போலீஸார் தலையிடக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தமிழக டிஜிபி, தென்காசி எஸ்பி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.27-க்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE